Home > வித்தியாலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

வேலணை மத்திய கல்லூரி என்ற பெயருடன் வலிகாமம் மேற்குப் பகுதிக்கு அறிவொளி காலவந்த குழந்தை 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 01 ஆம் திகதி நாவலர் பரம்பரையினால் உருவாக்கிப் பரிபாலிக்கப்பட்டு வந்த சைவப்பிரகாசத்தில் தீவுப்பகுதி மக்கள் செய்த தவப்பயனாய் உதித்தது. இதன் பிதா 54 தொகுதிகளுக்கும் தொகுதிக் கொன்றாக மத்திய கல்லூரியை விதந்துரைத்த இலங்கை வரலாற்றின் மிகச்சிறந்த கல்வி மந்திரியாகவிருந்த சேர் W.W. கன்னங்கரா ஆவர். வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட அன்றைய வலிமேற்கு பிரதிநிதி, சட்டசபைச் சபாநாயகர் சேர் வைத்திலிங்கம் துரைசுவாமியின் வழிகாட்டலில் அன்றைய வேலணைக் கிராமச்சங்கத் தலைவர் திரு. இ. மருதையினார் அவர்கள் மக்கள் கொடுத்துதவிய பணத்துடன் கொட்டில் போடுவித்து கல்லூரி இயங்க ஆவன செய்தார். சிறப்பான அதிபர் ஒருவரைப் பெற கல்வி இலாகாவில் வேலை செய்த தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உறுதுணையானார். திரு. A.K. கந்தையா முதல் அதிபராகப் பொறுப்பேற்றார். 1945 நவம்பரில் 6 ஆம் வகுப்பில் ஆங்கில மொழிமூலம் கல்வி கற்கத் தொடங்கி 1950 டிசம்பரில் நடந்த S.S.C சோதனையில் நூறு வீத சித்தியும் பெற்ற பெருமையில் பெரும்பங்கு அதிபரையே சாரும். பாடசாலையிலே மாலை 6 மணிவரை தங்கி மாணவர் கல்வியில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். அவர் படிப்பித்த ஆங்கில இலக்கியமும், கணிதமும் இன்று நினைத்தாலும் இனிக்கும். அவருக்கு உறுதுணையாக சிறப்பான ஆசிரியர் குழாமும் அமைந்தது. மூன்று இல்லங்களுக்கிடையே – கன்னங்கரா, துரைச்சுவாமி, சாண்டிமன் இல்லங்கள் – விளையாட்டு, தோட்டவேலை என பலதரப்பட்ட துறைகளில் போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றன. இத்துடன் சாரணீய இயக்கமும் விருத்தியுற்றது.

கல்லூரியைத் திறந்து வைத்தவர் கல்வி மந்திரி கன்னங்கரா அவர்களேயாவார். ஒரு பெருவிழாவாக என்றும் நினைவுகூரத்தக்கதாக அது அமைந்தது. இவ்வாரம்ப காலத்தில் ஊர்காவற்றுறை, மண்கும்பான், கரம்பொன், சுருவில் போன்ற தூர இடங்களிலிருந்து மாணவ மாணவியர் நடந்து வந்தே கற்றனர். இக்காலப் பகுதியிலேயே புலமைப் பரிசில் திட்டமும் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்திற்கமைய, குறித்தவொரு தொகுதி மாணவர் அந்தத் தொகுதியிலுள்ள மத்திய கல்லூரியிலேயே படிக்க வேண்டும். எனவே, தூர இடங்களிலிருந்து கல்விகற்க வரும் மாணவர்கள் தங்கிப்யிருப்பதற்கு ஏதுவாக, இரண்டு வீடுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு ஆண்கள் விடுதி, பெண்கள் விடுதி என்பன அமைக்கப்பட்டன. முதலாவது விடுதி மேற்பார்வையாளராக திருமதி சபாரட்ணம் அவர்கள் கடமையாற்றினார். முதலாவது உதவி அதிபராக செல்வி L.P. முருகேசு அவர்களும் முதலாவது காவலாளியாக திரு. இராசையா அவர்களும் கடமையாற்றினர். எமது கல்லூரியின் முதலாவது மாணவன் திரு. M. லிங்கப்பிள்ளை ஆவார்.

எமது கல்லூரி வரலாற்றில், திரு. கன்னங்கரா, சேர். வைத்திலிங்கம் துரைச்சுவாமி, திரு. மருதையினார் மற்றும் அதிபர் திரு. A.K. கந்தையா ஆகியோர் மாணவர் சந்ததியினரால் என்றுமே நன்றியுடன் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.

1951 ஆம் ஆண்டு ஜனவரியில் திரு.V. தம்பு அவர்கள் அதிபரானார். நீண்ட காலம் பாடசாலைச் சுற்றாடலில் தங்கி அதிபர் பதவி வகித்தார். இவரது காலப்பகுதியில்தான் புதிய மாடிக்கட்டடங்கள் கொண்ட கல்லூரி கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஆளுனர் சோல்பரிப் பிரபுவினால் அடிக்கல் நாட்டப்பட்டு பின்னர் 1954 இல் பிரதமராகவிருந்த சேர். ஜோன் கொத்தலாவல அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பாடசாலைக்கு முன்பாக ஆண், பெண் விடுதிகளுமமைந்தன. மாணவர் தொகையும் அதிகரித்தது. G.C.E (A.L) வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டன. இக்காலப் பகுதியில் பழைய மாணவர்களும் பட்டம் பெற்ற பின் இங்கு ஆசிரியர்களாகச் சேர்ந்து கொண்டனர். புது ஆர்வம் பிறந்தது. மாணவர், O.L, A.L வகுப்புக்களில் சிறப்பான பெறுபேறுகள் பெறத்தொடங்கினர். விஞ்ஞானம், கலைப்பகுதி என்பவற்றில் பல மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படிக்கத் தொடங்கினர். சிவகாமி சமேத நடராஜப் பொருமான் ஆலயத்திற்கு அடிக்கல்லும் நாட்டப்பெற்றது. அதிபர் தம்பு அவர்கள் மக்கள் மனதில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துக்கொண்டார். இவருக்கான பிரியாவிடை நிகழ்வு பெருவிழாவாக அமைந்தது. கொழும்பிலும் பழைய மாணவர்கள் பிரியாவிடை நிகழ்வை மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர்.

இவரைத் தொடர்ந்து திரு. A.T. சபாரட்ணம் அவர்கள் அதிபரானார் (1962 – 1964). இவர் மாணவர் கல்வி சிறப்புற வேண்டிய அடித்தளங்களை நாட்டினார். பல பிரிவுகளைக் கொண்டு ஒவ்வொரு வகுப்பும் அமைந்திருந்த படியால் ஒரு பிரிவு மாணவர் சர்வகலாசாலை சென்று கல்வி கற்கக் கூடியதாக அமைய வேண்டும். புத்தி கூர்மை மிக்க மாணவர்களை இனங்கண்டு மேலோங்கச் செய்ய வேண்டுமென அதற்குரியவற்றையும் செய்தார். ஆங்கிலக் கல்வி சிறப்பாயமைய அதற்கென ஒரு சிறப்பான ஆசிரியரையும் தருவித்து Tape Recorder, Cassette முதலியன பெற்று விசேடமாக பேச்சு ஆங்கிலம் (Spoken English) விருத்தியடையவென பெரு முயற்சி எடுத்தார். விடுதியில் மாணவர்க்குரிய உணவு வகைகள் தரமிக்கதாகவிருக்கவும் பெரு முயற்சி எடுக்கப்பட்டது. விஞ்ஞான ஆய்வுகூடங்கள் மேலும் வளம் பெற்றன. பாடசாலை, விடுதி என்பன அமைந்துள்ள காணிகளினூடாகப் பொதுப்பாதைகள் அமைவதைத் தடுத்து சுற்று வேலிகள் அமைக்கப்பட்டன. சங்கீத விழாவும் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை பல வழிகளிலும் முன்னேற விருந்த சந்தர்ப்பத்தில் இவருக்கு இடமாற்றம் ஏற்பட்டது தீவுப்பகுதி மக்களின் துரதிருஷ்டமேயாகும்.

இவரைத் தொடர்ந்து வந்தவர் திரு. சிவசிதம்பரம் அவர்கள். இரு வருடங்கள் இங்கு அதிபர் பதவி வகித்தவர். கண்டிப்பானவர், கொள்கைவழி நடப்பவர். சிறப்பான விஞ்ஞான ஆசிரியரும்கூட. இவரது காலப்பகுதியிலும் பல்கலைக் கழகத்திற்கு மாணவர்கள் பலர் தெரிவு செய்யப்பட்டனர். அல்லாதோருக்கும் உத்தியோக வாய்ப்புக்கள் கிடைத்தன. இவரைத் தொடர்ந்து திரு. J.S. அரியரட்ணம் அவர்கள் 1967 – 1971 வரை அதிபராக சிறப்பாக செயலாற்றினார். பாடசாலை முன்னேற பல வழிகளிலும் முயற்சியெடுத்துக் கொண்டார். O.L, A.L வகுப்புக்களில் சிறப்பான பெறுபேறுகள் ஏற்பட்டன. பாடசாலை வெளிளிவிழாக் கொண்டாட பல முயற்சிகள் மேற்கொண்ட போதும் அது கைகூடவில்லை என்ற ஆதங்கத்துடன் மாற்றலாகி அவர் செல்ல, வேலணையைச்சேர்ந்த திரு. ப. பொன்னுத்துரை அவர்கள் குறுகிய காலம் அதிபராகக் கடமையாற்றினார். இவரைத்தொடர்ந்து திரு. C. இராஜநாயகம் அவர்கள் 1972 இல் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். தீவுப்பகுதியைச் சேர்ந்தவர். இவரது காலப்பகுதியும் பாடசாலை வரலாற்றில் ஒரு சிறப்பான காலமாகும். கலை, விஞ்ஞானப் பகுதிகள் புத்தூக்கம் பெற்றன. பாடசாலை மைதானம் மாணவர் தேவைக்குப் போதுமானதாகக் காணப்படாமையினால், ஆண்கள் விடுதிக்கு முன்புள்ள காணியை ஒழுங்கான ஒரு விளையாட்டு மைதானமாக உருவாக்குவதற்கு பணம் அதிகம் தேவைப்பட்டது. இதற்கு ஒரு கலைவிழா சிறப்பாக நடாத்தி பணமும் சேர்க்கப்பட்டது. இவரும் பதவியுயர்வுடன் மாற்றலாகிச் செல்ல திரு. தியாகராசா அவர்கள் மிகக் குறுகிய காலம் அதிபர் பதவியை ஏற்றார். இவரைத் தொடர்ந்து வந்த அதிபர் வேலணை சேக்ஷ்பியர் நாகலிங்கத்தின் மருகர் திரு. C. குணபாலசிங்கம் ஆவார்.

இவரும் பாடசாலையை பல வழிகளிலும் முன்னேற்ற அயராது உழைத்தார். இவரது காலப்பகுதியில் பொறியியல் துறை மற்றும் பல் மருத்துவத்துறை ஆகியவற்றிற்கும் மாணவர் செல்லத் தொடங்கினர். புதிய நூலகம் திறக்கப்பட்டது. புதிய விளையாட்டு மைதானத்தை உருவாக்கும் கனவும் நனவாகியது. விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக அமைய இத்திடல் சிரமதானப் பணி மூலம் செப்பனிடப்பட்டது. சாரணீய இயக்கம் இதில் முக்கிய பங்கேற்றுக்கொண்டது. இக்காலப் பகுதியிலேயே பாடசாலையின் பெயரும் மாற்றம் பெற்றது.

இவரைத் தொடர்ந்து பிரதி அதிபராகவிருந்த பண்டிதர் திரு. க. இராசையா அவர்கள் சிறிதுகாலம் அதிபராகக் கடமையாற்றிய பின் திரு. சிவராஜரட்ணம் அவர்கள் 1984 – 1987 வரை அதிபராகப் பொறுப்பேற்றார். நாட்டில் பல கஷ்டமான சூழ்நிலைகள் பாடசாலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஆயினும் விளையாட்டுப் போட்டி, பரிசளிப்பு விழா என்பன சிறப்பாகவே நடைபெற்றன. பாடசாலையில் அமைந்த சிவகாமி சமேத நடராஜப் பெருமான் ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இவரது காலப்பகுதியில் மருத்துவத் துறைக்கும் மாணவர் செல்லத் தொடங்கினர். கொத்தணிப் பாடசாலை அமைப்பு முறையும் ஆரம்பித்தது.

இவரைத் தொடர்ந்து பழைய மாணவரான வேலணையைச் சேர்ந்த திரு. S. சண்முகநாதன் அவர்கள் கொத்தணி அதிபர் பொறுப்பை ஏற்று சிறப்பாக வழிநடாத்திச் சென்றார். நாட்டில் நிலவிய குழப்ப நிலை பாடசாலையில் பல வழிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இவரும் பதவியுயர்வுடன் செல்ல, பழைய மாணவரான வேலணையைச் சேர்ந்த திரு. பொ. கேதாரநாதன் அவர்கள் அதிபர் பதவியை ஏற்றார். இவரது காலப்பகுதி சோதனைகள் நிறைந்ததாயினும், நிலைமைகளை பாடசாலைக்குச் சாதகமாக்கிக் கொண்டார். தீவுப்பகுதியிலிருந்து மக்கள் அனைவரும் இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. ஆயினும் பிள்ளைகளை ஓரளவிற்கு ஒன்று திரட்டி கொட்டடி நமசிவாயம் வித்தியாலயத்தில் பாடசாலையை இயங்க வைத்தார். இரண்டு பாடசாலைகள் ஒருங்கே முன்னேறின. விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடாத்தப்பட்டது.

பரிசளிப்பு விழா நடாத்தப் பணம் தேவைப்பட்டது. அதிபரும் பழைய மாணவர் சங்கச் செயற்குழுவும் பணம் திரட்டப் புறப்பட்டனர். ஐந்து பழைய மாணவர்களின் உதவி பெற்றதும் மனம் நிறைந்து திரும்பிவிட்டனர். பரிசளிப்பு விழாவிற்கு யாழ் இந்துக்கல்லூரி இடம் தந்துதவியதுடன் அதன் அதிபர் வேண்டிய சகல உதவிகளையுஞ் செய்தார். யாழ் சர்வகலாசாலையில் விரிவுரையாளர்களாக இருந்த பழைய மாணவர்களின் உதவியுடன் சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக உப வேந்தர் திரு துரைராஜா அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். மாணவர்கள் சிறப்படைந்தனர். இதனையடுத்து கல்லூரி தனித்தியங்க வேண்டுமென்ற நிலை ஏற்பட அதிபர் ஒரு அன்னையின் உதவியை நாடினார். அவரது இல்லத்தில் கொட்டில்கள் போட்டு வகுப்புக்களை நடாத்த அதற்கு இணக்கமும் பெற்று பல உடனடித் தேவைகளுக்கு பணம் சேர்ப்பதற்கு பல சிக்கல்களுக்கு மத்தியில் கொழும்பு சென்று பழைய மாணவர்களை ஒன்று திரட்டி நிதி திரட்டினார். உலகளாவிய ரீதியில் பரந்துபட்டிருக்கும் பழைய மாணவ சமுதாயத்தின் உதவியையும் நாடினார். London, Canada, France, Sydney, Melbourne ஆகிய இடங்களில் பழைய மாணவர் சங்கங்கள் அமைக்கப்பட்டு நிதியுதவியும் வரத் தொடங்கிற்று. இந் நிலையில் அவர் ஓய்வு பெற பழைய மாணவரான வேலணை மைந்தன் திரு. சு. கலாதரன் அவர்கள் அதிபரானார். பழைய மாணவர் உதவிய பணத்தில் தளபாடங்கள், மின்பிறப்பாக்கி என்பன பெறப்பட்டுப் பாடசாலையை நன்கு இயங்க வைத்தார்.

யாழ்ப்பாண நகரின் பிரபல கல்லூரிகளுக்கு நிகராகக் கல்வி, விளையாட்டு மற்றும் உயர்வகுப்பு மாணவர் சங்க இராப்போசன நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன. அந்நேரத்தில் பாடசாலையின் தேவைப்பாடுகளை, அதிபர் கேட்கும்வேளையிலெல்லாம் நிறைவேற்ற பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் முன்னின்றுழைத்தது. புலம்பெயர் நாடுகளிலுள்ள பாடசாலைக் கிளைகளையெல்லாம் பாடசாலையின் செயற்திட்டங்களில் ஒருங்கிணைக்கும் பணியில் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் திறம்பட இயங்கியது. கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தில் திரு.நவரத்தினம், திரு. பாலகிருஷ்ணன், திரு. பாலசுந்தரம்பிள்ளை, திரு. சத்தியசீலன் மற்றும் திரு. மாணிக்கவாசகர் ஆகியோரது பணிகள் சிறப்பாகக் குறிப்பிடப்படவேண்டியவை. திரு. கலாதரன் அவர்களது காலத்திலேயே, வடமாகாண அதிபர் சங்கப் பதவியை எமது கல்லூரி அதிபர் வகித்தமை எமது கல்லூரிக்குக் கிடைத்த பெருமையாகும். மாணவர்கள் தொடர்ந்து சர்வ கலாசாலைக்குச் செல்லத் தொடங்கினர். விளையாட்டுப் போட்டிகளும் மிகச் சிறப்பாகக் கொண்டாட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட போதும் 1995 October இல் யாழ்ப்பாணமே திடீரென இடம் பெயர்ந்தது.

1997 இல் மீண்டும் பாடசாலை புத்துயிர் பெறத் தொடங்கிற்று. வேலணை மத்திய கல்லூரியின் பழைய மாணவர், எமது மண்ணின் மைந்தன், கல்வி அதிகாரி திரு. சு. இரத்தினராஜா அவர்களின் முயற்சியால் குற்றுயிராய் பல வழிகளிலும் தடைப்பட்டிருந்த எமது அன்னை புத்துயிர் பெற்றெழத் தொடங்கினாள். 1998 இல் ஏறக்குறைய 300 மாணவர்கள் கொண்டதாய் பழைய மாணவர் திரு. K. கணேசலிங்கம் அவர்களது தலைமையில் வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் இயங்கத் தொடங்கிய எம் அன்னைக்கு கைகொடுத்துதவ அனைவரும் முன்வந்தனர். இடப்பெயர்வு, தனிப்பட்டோர் மற்றும் குடும்பங்களில் ஏற்படுத்திய பாதிப்பிலும் பார்க்கக் கூடிய பாதிப்பை எமது அன்னைக்கு ஏற்படுத்தியுள்ளது. அதிபரும் எமது கல்லரியின் பழைய மாணவர். ஆசிரியர்களும் எமது கல்லூரியின் பழைய மாணவர்கள். அனைவரும் சிறப்பாகப் பணியாற்றி எமது அன்னையின் வளர்ச்சிக்கு அயராது உழைக்கின்றனர்.

வாழ்க எம் அன்னை!

வாழ்க எம் மாணவர் சமுதாயம்!!

மூலம் :-

திருமதி. திருமகள் கேதாரநாதன்

பழைய மாணவி