Home > பிரான்ஸ் கிளையின் உதயம்

தீவக மக்களின் கல்விக்கான கலங்கரை விளக்காக விளங்கி வந்தது வேலணை மத்திய மகா வித்தியாலயம். 1991 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் தீவகம் முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் தீவக மக்களின் வாழ்வு மேலும் சின்னாபின்னமாகியது.

இரண்டாயிரம் மாணவர்கள் வரை கல்வி கற்றுவந்த தீவகத்தின் முக்கிய கல்லூரி உட்பட அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வி கற்றுவந்த மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்புக்குள்ளானது.

இடம்பெயர்ந்த வேலணை மத்திய மகா வித்தியாலய மாணவர்களுக்காக யாழ்ப்பாணத்திற் தற்காலிகக் கொட்டகைகள் அமைக்கப்பட்டுப் பலத்த சிரமங்களுக்கும், அவலங்களுக்கும் மத்தியில் மாணவர்களுக்கான கல்வி வசதிகள் செய்யப்பட்டன. தீவக மக்கள் முழுமையாக அகதிகளாக்கப்பட்டு அரசாங்க உதவிகள் மறுக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மக்கள் மத்தியில் பழைய மாணவர் சங்கங்கள் அமைத்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உதவிகள் பெறுவதற்கு தாய்ச் சங்கத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிணங்க காலஞ்சென்ற முன்னாள் அதிபர் திரு. சே. பொ. கேதாரநாதன் அவர்கள், – கல்லூரியின் பழைய மாணவரான திரு யா.பாலகிருஷ்ணனுடன் 1992 ஆம் ஆண்டு கடிதமூலம் தொடர்பு கொண்டிருந்தார். அவரின் வேண்டுகோளிற்கிணங்க திரு. யா. பாலகிருஷ்ணன் அவர்களால் வேலணை மத்திய மகா வித்தியாலயப் பழைய மாணவர் சங்கப் பிரான்ஸ் கிளையின் அங்குரார்ப்பணக் கூட்டம் 08.11.1992 இல் பாரிசில் கூட்டப்பட்டது. இவ்வங்குரார்ப்பணக் கூட்டத்தில் வேலணை மத்திய மகா வித்தியாலய வளர்ச்சியிலும் மாணவர்களின் கல்வியிலும் அக்கறைகொண்ட இருபத்தியெட்டு நல்லுள்ளங்களின் உறுதுணையுடன் பழைய மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, 24.03.1993 முதல் வேலணை மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க பிரான்ஸ் கிளை இலாப நோக்கற்ற நலன்புரிச் சங்கமாக பிரான்ஸ் அரச அங்கீகாரம் பெற்று இயங்கிவருகின்றது.

vccosa_licence
vccosa_reg_doc